Ticker

6/recent/ticker-posts

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் பற்றிய தகவல்கள் | தமிழர் வாழ்வியல்

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல்
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல்

ஒரு நாட்டின் சிறப்பை தெரிந்துக்கொள்ள, அந்த நாட்டின் மொழி, இலக்கியம், இலக்கணம் மற்றும் நீண்ட நெடிய வரலாற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

அந்த வகையில் எல்லாவற்றிலும் சிறந்து விளக்கும், நமது தமிழை சிறப்பித்து பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை பற்றி பலரும் அறியாத பல தகவல்களையும் தெரிந்துக்கொள்வோம்.

பொருளடக்கம்

  • நாடும், அதன் பெருமைகளும்
  • தமிழ்த்தாய் வாழ்த்தும், அண்ணாவும்
  • இன்றைய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல்
  • முழு தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல்
  • தமிழ்த்தாய் வாழ்த்து பாடலும், சர்ச்சையும்

நாடும், அதன் பெருமையும்

நமது நாட்டின் பெருமைகளை நாம் என்றும் மறக்காமல் இருக்கவும், வெளிநாட்டினர் நமது நாட்டின் பெருமைகளை தெரிந்துக்கொள்ளவும் எண்ணற்ற பல செயல்களை செய்துக்கொண்டு இருக்கின்றோம்.

ஒரு நாட்டின் சிறப்பு என்பது, அந்த நாட்டின் நாகரீகம், பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை சார்ந்தே அமையும்.

இந்த நாகரீகம், பண்பாடு மற்றும் கலாச்சாரம், இந்த மூன்றையும் வெளியுலகிற்கு பறைசாற்ற இன்றியமையாத ஒன்றாக இருப்பது மொழியாகும்.

இந்த உலகில் எண்ணற்ற மொழிகள் தோன்றியுள்ளது. அதுப்போல, கால மாற்றங்களுக்கு ஈடுக்கொடுக்க முடியாமல் அழிந்தும் உள்ளது.

உலக வரைபடம்
உலக வரைபடம்

ஒரு நாட்டின் பெருமைகளை எடுத்துக்கூற ஒரு மொழி எந்தளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு அந்த மொழிக்கென்று தனிப்பட்ட சிறப்புகள் இருக்க வேண்டியதும் அவசியம்.

ஒரு மொழியின் சிறப்புகளை கூற, அந்த மொழியின் இலக்கண மற்றும் இலக்கியங்கள் உதவுகின்றன.

நமது தாய்த்தமிழ் மொழியில் எண்ணற்ற இலக்கண மற்றும் இலக்கியங்கள் உள்ளதை, இந்த உலகம் அறியும். நீங்களும் அறிவீர்கள்.


தமிழ்த்தாய் வாழ்த்தும், அண்ணாவும்

நமது தாய்த்தமிழ் மொழியை கண்டு இந்த உலகமே வியந்து போனது. 

நமது தாய்த்தமிழை பண்டைய நாகரீகத்தில் சிறந்து விளங்கிய, நமது முன்னோர்கள் பலர் சிறப்பித்து பல்வேறு பாடல்கள் பாடியுள்ளனர்.

ஆனால், அதில் மனோன்மணியம் திரு.பெ. சுந்தரனார் எழுதிய பாடலை நாம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக பாடி வருகின்றோம்.

மனோன்மணீயம் திரு.பெ. சுந்தரனார் அவர்கள் கேரளா மாநிலத்தில் உள்ள ஆலப்புழா என்ற ஊரில் 1855 ஆம் ஆண்டு பிறந்தார்.

இவரின் பெற்றோர் திரு.பெருமாள் பிள்ளை மற்றும் திருமதி. மாடத்தி அம்மையார் ஆவர்.

இவர் புகழ்மிக்க மனோன்மணீயம் என்கின்ற நூலை எழுதினார். இந்நூலில் உள்ள வரிகளே, தமிழ்த்தாய் வாழ்த்தாக உள்ளது.

சைவநெறி
சைவநெறி

இவர் சைவநெறியில் சிறந்து விளங்கியது மட்டுமல்லாமல், திரு. மாணிக்கவாசகர் பற்றி ஆராய்ந்து, அந்த தகவல்களை கிறித்துவ கல்லுரியில் வெளியிட்டார்.

மனோன்மணீயம் திரு.பெ. சுந்தரனார் எழுதிய பாடல் எதற்காக தமிழ்த்தாய் வாழ்த்தானது என்று உங்களுக்கு தெரியுமா?

நமது மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்த அறிஞர். அண்ணா என்று அறியப்படும் C.N அண்ணாதுரை அவர்கள் தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றின் காரணமாகவே இப்பாடல் தமிழ்த்தாய் வாழ்த்து ஆனது.

அறிஞர் அண்ணா அவர்கள் பெ. சுந்தரனார் இயற்றிய மனோன்மணீயம் நூலில், இடம்பெற்ற "நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்" எனத்தொடங்கும் பாடலை தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவிக்க வேண்டும் என ஆசைப்பட்டார்.

ஆனால், அதற்குள் அவர் இறந்துப்போக, 1970 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வராக பதவி ஏற்ற திரு.மு.கருணாநிதி அவர்கள், அண்ணாவின் ஆசையை நிறைவேற்றும் வகையில், அப்பாடலை தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக அறிவித்தார்.

அன்று முதல் இன்று வரை, அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் என அனைத்து அரசு சார்ந்த நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டு வருகிறது.


இன்றைய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல்

பெரும்பாலும் பாடப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் 8 வரிகளே கொண்டுள்ளது.

நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !

உன் சீர் இளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!


முழு தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்

திரு. அண்ணா அவர்கள் விரும்பி, இன்று பாடப்பட்டு வரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முழுமையான பாடல் அல்ல என்பது உங்களுக்கு தெரியுமா?.

திரு.பெ. சுந்தரனார் இயற்றிய மனோன்மணீயம் பாடலில் இடம்பெற்ற பாடலின் மொத்த வரிகள் 12 ஆகும். அதிலிருந்த 4 வரிகள் நீக்கியே, திரு. மு.கருணாநிதி அவர்கள் அறிவித்தார்.

முழு தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"
- மனோன்மணியம் சுந்தரனார்

உண்மையான தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலில் நீக்கிய வரிகளில் பரம்பொருளான இறைவனை முதலில் வாழ்த்தி வணங்கியுள்ளார்.

அடுத்ததாக கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் துளு மொழிகள் தமிழில் இருந்து தோன்றிய பெருமையை புகழ்ந்துள்ளார்.

மூன்றாவதாக ஆரிய மொழிகள், இன்றைய உலக வழக்கத்தில் இருந்து மறைந்ததை போல இல்லாமல், தமிழ் மொழி என்றும் இளமையாக இருப்பதை குறிப்பிட்டு சிறப்பித்துள்ளார்.


தமிழ்த்தாய் வாழ்த்து பாடலும், சர்ச்சையும்

நமது தாய்த்தமிழ் நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து எவ்வளவு சிறப்பு பெற்றது என்பது அனைவருக்கும் தெரிந்ததே!.

இந்த பாடல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை சர்ச்சைக்குள் இருந்து வருவதும் உண்மைதான்.

நமது தமிழ்மொழியை எவ்வளவு சிறப்பித்து மனோன்மணீயம் பெ. சுந்தரனார் இயற்றியுள்ளார் என்பதை தெரிந்துக்கொண்டு இருப்பீர்கள்.

முழு தமிழ்தாய் வாழ்த்துப்பாடலில் தமிழின் சிறப்புகளை தான் பாடியுள்ளார் என்பது நன்றாக புரியும். பின்னர், எதற்காக நீக்கப்பட்டது என்பது தான். இன்றளவும் சர்ச்சையாக இருந்து வருகிறது.

Karunanidhi pay homage to Manorama
மு.கருணாநிதி

மு.கருணாநிதி அவர்கள் அதில் குறிப்பிட்ட சில வரிகளை ஏன் நீக்கினார்?. அதில் ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா? என்று சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

மு. கருணாநீதி அவர்கள் கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் துளு மொழிகள் தமிழில் இருந்து தோன்றியது என்பதை மறைக்கவே இவ்வாறு செய்தார் என்று ஒருசிலர் சர்ச்சையை பரப்பி வருகின்றனர்.

வேறுசிலரோ, மனோன்மணீயம் பெ. சுந்தரனார் பரம்பொருளை போற்றியும், ஆரியமொழிகளின் நிலைகளை குறித்து பாடியதால் தான், அந்த வரிகள் நீக்கப்பட்டதாக கூறி வருகின்றனர்.

நமது தாய்த்தமிழ் மொழியில் கூட அரசியல் செய்வதாக என்று அன்று முதல், இன்று வரை மு. கருணாநிதி அவர்களை விமர்ச்சித்து வருகின்றனர்.

இந்த கேள்விகள் அனைத்தும் சமூக தளங்களின் வாயிலாக சேகரிக்கப்பட்டது.


முடிவுரை

நீங்கள் எதனால் இவ்வரிகள் நீக்கப்பட்டு இருக்கும் என்று நீனைக்கின்றீர்கள்? என்பதை கருத்துக்களாக தெரிவியுங்கள்.

இந்த பதிவின் மூலமாக முழுமையான தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பற்றியும், அதைக்குறித்து நிலவி வரும் அரசியல் சர்ச்சைகளை பற்றியும் தெரிந்துக்கொண்டு இருப்பீர்கள் என நம்புகிறேன்.

Post a Comment

0 Comments